குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்தை அழித்து சாலை அமைக்கும் பணி தீவிரம்

குன்னூர்: குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்தை அழித்து சாலை அமைத்து வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நாளுக்கு,நாள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரண்டு மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றினை ஆக்கிரமித்து ஒரு சிலர் நான்கு முதல் ஐந்து மாடிகள் வரை கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த கன மழையால் ஆக்கிரமிப்புகள் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள நீர் புகுந்து குன்னூர் நகரமே கடும் பாதிப்புக்குள்ளாகியது. இதையடுத்து தன்னார்வலர்கள் இணைந்து குன்னூர் ஆற்றினை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை அழித்து கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டக்கூடாது என விதிமுறை இருந்தும், அரசியல் பலத்தைக் கொண்டு நான்கு முதல் ஐந்து மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். முக்கிய ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களை  ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவதால் அதிக மழைப்பொழிவு காலங்களில் மண்சரிவு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மலையை குடைந்து சாலை அமைப்பதற்கு தடை உள்ள நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கை பயண்படுத்தி  தேயிலை தோட்டங்களில் சாலை அமைத்து வருகின்றனர். குன்னூர் அருகே உள்ள கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட  கேத்தொரை கிராமம் அருகே தேயிலை தோட்டங்களை  பொக்லைன் உதவியுடன் அழித்து சாலை அமைத்து வருகின்றனர்.  இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: