மேலே விமான ஓடுதளம்... கீழே வாகன சுற்றுச்சாலை மதுரையை நிராகரித்தது மத்திய விமான போக்குவரத்து ஆணையம்

மதுரை: வாரணாசி, மைசூர் விமான நிலையங்களைப் போல, மேல் பகுதியில் விமான ஓடுதளம், கீழே சுற்றுச்சாலையை துண்டிக்காமல் வாகனங்கள் செல்வதற்கான வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதுரையில் கட்டாயம் நிறைவேற்றிட கோரிக்கை வலுத்துள்ளது. மதுரையில் 1942ல் முதலாம் உலகப்போரின் போது விமான நிலையம் அமைக்கப்பட்டு, 1956 முதல் பயணிகள் விமான சேவை தொடங்கியது. சென்னை - மதுரை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்ட விமானம், அடுத்தடுத்து மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விரிவடைந்தது.

மதுரை விமானநிலையம் சுமார் 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு கொண்டுள்ளது.

மாதம் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஓடுபாதை தற்போது 7 ஆயிரத்து 500 அடி நீளம் இருப்பதை, 12 ஆயிரத்து 500 அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்திட 10 ஆண்டுகள் முன்பு திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கின. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தொய்வில் இப்பணிகள் முடங்கின. அருகாமை அயன்பாப்பாக்குடி, பெருங்குடி உள்ளிட்ட 6 கிராமங்களில் சுமார் 460 ஏக்கர் பட்டா நிலங்கள், 155 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. நில உரிமையாளர்களுக்கு ரூ.166 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை விமானநிலைய ஓடுதள விரிவாக்கத்தால், மதுரை சுற்றுச்சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மற்றும் கேரள பகுதிகளுக்கான வாகன போக்குவரத்து பாதிக்காத வகையில், ‘அண்டர் பாஸ்’ முறையில் கீழே வாகனங்கள் செல்லவும், மேலே விமான ஓடுதளம் அமையவும் திட்டம் இறுதி செய்து, விமான போக்குவரத்து ஆணையகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பியது. ஆனால் இத்திட்டத்தை விமான போக்குவரத்து ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறும்போது, ‘‘இதுபோன்ற திட்டம் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி மற்றும் மைசூர் விமானநிலையங்களில் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடந்து வருகிறது.

மதுரை விமானநிலைய ஓடுதள விரிவாக்கத்தை ‘அண்டர் பாஸ்’ முறையில் அமைத்தால் ரூ.250 கோடி செலவாகும். சுற்றுச்சாலை மீதே அமைத்து விட்டால் ரூ.100 கோடி மதிப்பில் முடித்துவிடலாம் என விமான போக்குவரத்து ஆணையம் கருதி, இத்திட்டத்தை அங்கீகரிக்கவில்லை எனத் தெரிகிறது. சுற்றுச்சாலை அமைத்திட கூடுதல் நிலம் தனியாக கையகப்படுத்த வேண்டும். இதனால், ஓடுதள விரிவாக்கத் திட்டம் செயல்பட மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும். எனவே மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் ‘அண்டர் பாஸ்’ திட்டத்தை அங்கீகரித்திட வேண்டும், தமிழக அரசும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், இத்திட்டத்திற்கு ஆகும் கூடுதல் செலவை தமிழக அரசே ஏற்றிட முன் வரவேண்டும்’’ என்றார்.

Related Stories: