தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வேளச்சேரி வெள்ளக்காடானது: படகுகள் மூலம் முதியவர்கள், குழந்தைகள் மீட்பு

* வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி

* புயல் பாதிப்புபற்றி பாடம் கற்கவில்லை என குமுறல்

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது. பல்வேறு முக்கிய தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலமாக மீட்கப்பட்டனர். முந்தைய புயல்களின் போதும் சம்பந்தப்பட்ட பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இதுவரை வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என ெபாதுமக்கள் குற்றம்சாட்டினர். நிவர் புயலின் எதிரொலியாக கடந்த திங்கட்கிழமை இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் அனைத்து தாழ்வான பகுதிகளும் மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.

இதை தொடர்ந்து, நேற்றும் அனைத்து பகுதிகளிலும் மழை விட்டு விட்டு பெய்து வந்தநிலையில், மதியம் முதல் பல பகுதிகளில் பலத்த காற்று வீசத்தொடங்கியது. பிறகு கனமழை கொட்டியது. இதனால் சென்னை சாந்தோம் சாலையில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் முன்பு சாலையில் பெரிய மரம் ஒன்று பலத்த முறிந்து விழுந்தது. அப்போது சம்பந்தப்பட்ட சாலையில் பயணித்த மக்கள் பீதியடைந்தனர். இதேபோல், மற்ற தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, வேளச்சேரியில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு மதியம் முதல் பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் பலர் வேறு இடங்களுக்கு சென்றனர். வேளச்சேரி ராம் நகரில் 7 தெருக்கள் தண்ணீரில் மூழ்கி கடுமையாக  பாதிக்கப்பட்டது.

மேலும் பாரதி நகர், பிள்ளையார் கோயில் பகுதி, கோதாவரி தெரு, தரமணி தெரு என அப்பகுதி முழுவதும் வீடுகள், கடைகள் என அனைத்திலும் தண்ணீர்  புகுந்தது. இதையடுத்து அப்பகுதியினர் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பிறகு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஊர்க்காவல் படையினர் மற்றும்  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில்  ஈடுபட்டனர். அப்போது முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை 2 படகுகள் மூலமாக பாதுகாப்பான  இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள், சென்னையில் மற்ற இடங்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி  வைத்தனர். மீட்பு பணி குழுவினரால் 20 குடும்பங்களுக்கு மேல்  மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். முன்பு வீசிய புயல்களின் போது வேளச்சேரி பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

அப்போது அவர்கள் தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் நடப்பாண்டும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதும், கடந்த முறையை போல் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்கிற அச்சத்தில் வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் இருபுறமும் கார்கள், மற்றும் மினி வேன்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தினர். இதனால் அங்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

Related Stories: