சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைப்பால் பரிதாபம்: வரவோ 10 லட்சம் செலவோ 1 கோடி: தினமும் 10,000 பேரை அனுமதிக்கும்படி அரசுக்கு கடிதம்

திருவனந்தபுரம்: ‘சபரிமலையில்  தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 10  ஆயிரமாக உயர்த்த வேண்டும்,’ என்று கேரள அரசுக்கு தேவசம் போர்டு மீண்டும் கடிதம்  எழுதி உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி  நடந்து வருகின்றன. பக்தர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி,  ஞாயிறு ஆகிய தினங்களில் 2,000 பேரும் தரிசனம் செய்யலாம். கடந்த  மண்டல காலத்தின் தொடக்கத்தில் தினமும் சராசரியாக 3.50 கோடிக்கு மேல்  வருமானம் கிடைத்து வந்தது. ஆனால், குறைந்த அளவில் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவதால் இந்த ஆண்டு தினமும் சராசரியாக 10 லட்சம் மட்டுமே  வருமானம் கிடைத்து வருகிறது. இதனால், திருவிதாங்கூர் தேவசம் போர்டு திணறி  வருகிறது. எனவே, பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசிடம் தேவசம் போர்டு ஏற்கனவே கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், பக்தர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு தேவசம் போர்டு  மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. அதில், ‘பக்தர்களின் வருகை   கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், கோயில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது. தற்போது,   சபரிமலையில் தினமும் ஒரு கோடி வரை செலவாகிறது. ஆனால், தினமும் 10 லட்சம்   மட்டுமே வருமானம் கிடைக்கிறது. எனவே, தினசரி பக்தர்களின்  எண்ணிக்கையை 10  ஆயிரமாக உயர்த்த வேண்டும். இதற்கான அனைத்து வசதிகளும்  செய்யப்பட்டுள்ளன. நெரிசல் உள்ள நாட்களில் நிமிடத்துக்கு 90 பக்தர்கள் 18ம்  படி ஏற முடியும். நிமிடத்துக்கு 9 பக்தர்களை அனுமதித்தால் கூட  ஒரு நாளில் 10 ஆயிரம் பக்தர்கள்  தரிசனம் செய்ய முடியும்,’ என்று  கூறப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை   நடத்தி முடிவு எடுக்க, கேரள அரசு தீர்மானித்துள்ளது.

Related Stories: