கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலம்...!! புயல் தாக்கத்தால் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வேளச்சேரி

சென்னை: நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், வேளச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்களில் வெள்ளநீர் புகுந்து விடாமல் இருக்க வேளச்சேரியில் வசிப்பவர்கள் தங்களின் வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். சென்னையிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக விடாமல் மழை கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாக பெருகி ஓடும் தண்ணீரினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள ஆற்றிலும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேளச்சேரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதுடன், இன்று நண்பகலுக்குப் பிறகு காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் தங்கள் வீடுகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாமல், இப்பகுதி மக்கள் அருகிலுள்ள மேம்பாலத்தின் இருபுறத்திலும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். வேளச்சேரியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: