அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து; தவிக்கும் மக்கள்

சென்னை: அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.குடியிருப்பில் இருந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர். நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனால், இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தற்போது ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கத்தில் இருந்து 7 கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பால் அடையார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதால் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் இடிந்த விழுந்ததால் தண்ணீர்  குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இது குறித்து உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையுடன் வந்த  மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.

Related Stories: