பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு: முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து.!!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பாஜ 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கூட்டணி கட்சிகளும் சில இடங்களை பிடித்தன.

தொடர்ந்து, நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், தொடர்ந்து 4-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் குமார் கடந்த 16-ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

இந்நிலையில், பீகார் சட்டமன்ற சபாநாயகர் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், சபாநாயகர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக இருந்த சின்ஹாவுக்கு 126 வாக்குகள் கிடைத்தன. மகா கூட்டணி வேட்பாளர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு 114 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.  பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றதால் பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, முதலமைச்சர், நிதிஷ் குமார் துணை முதல்வர்கள் - தார் கிஷோர் பிரசாத் , ரேணு தேவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜாஷ்வி யாதவ் ஆகியோர் சின்ஹாவை சபாநாயகர் நாற்காலியில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, சபாநாயகராக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ விஜய் சின்காவிற்கு முதல்வர் நிதிஷ் குமார்  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்த ஒருவர் பீகார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. 2005 தேர்தல்களில் இருந்து, ஒரு ஜே.டி.யூ உறுப்பினர் எப்போதும் சபாநாயகர் ஆசனத்தை ஆக்கிரமித்துள்ளார். கட்சியின் உதய் நாராயண் சவுத்ரி இரண்டு முறை (2005-2010 மற்றும் 2010-2015) சபாநாயகராக இருந்தார். ​​விஜய் குமார் சவுத்ரி 2015 மற்றும் 2020க்கு இடையில் சபாநாயகராக இருந்தார்.

Related Stories:

>