ராஜபாளையத்தில் மழையால் நிரம்பியது மயில் நீர்த்தேக்கம்: குடிநீருக்கு இனி பிரச்னை இல்லை

ராஜபாளையம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் ராஜபாளையம் மயில் நீர்தேக்கம் நிரம்பியுள்ளது. இதனால் மக்களின் குடிநீர் தேவை சரி செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் கோயில் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் மூலமாக ராஜபாளையத்தில்  உள்ள 42 வார்டுகளுக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து ராஜபாளையத்தில் உள்ள சில கண்மாய்கள் நிரம்பி உள்ளன. ராஜபாளையத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஆறாவது மயில் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் நிரம்பி கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக காட்சியளிக்கிறது.

இதன் அருகே இரண்டாவது நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது நீர்த்தேக்கம்   பராமரிப்பின்றி கிடந்த நிலையில் அதிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதையும் பராமரித்தால் ராஜபாளையத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இரண்டாவது நீர் தேக்கத்தை சரி செய்து அதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் தீரும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Related Stories: