நெருங்கும் நிவர் புயல்..!! 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள இந்திய கடற்படை  தயாராக உள்ளது. 5 வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும்  ஒரு  டைவிங் குழு சென்னையில்  தயாராக உள்ளது. மேலும், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளம் ஆகிய பகுதிகளில் கடற்படைப் பிரிவை சேர்ந்த  வெள்ள நிவாரணக் குழு தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் கடற்படையை சேர்ந்த கப்பல்  ஐ.என்.எஸ் ஜோதி  தேவைக்கேற்ப உதவிகளைச் செய்ய அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியது.  ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மேற்கு வங்க கடல் மற்றும் தமிழக ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும்.  தென் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.  

இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நிவர் புயல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.  நிவர் புயலை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம் என்று கடலோர காவல்படை அறிவித்து உள்ளது. இதற்காக, இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  இதேபோன்று 15 பேரிடர் மேலாண்மை குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தெரிவித்து உள்ளது.

Related Stories:

>