சென்னையில் இருந்து மீன் பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களும் கரை திரும்பிவிட்டனர்; அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் 64வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் விருது பெற்ற 96 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்கு 2 லட்ச ரூபாய்க்கான காசோலையும், வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களுக்கு 1.5 லட்சத்திற்கான காசோலையும், வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘பள்ளி பருவத்தில் அவர்களுக்கு இது போன்று விளையாட்டில் ஊக்கம் அளித்தால் அவர்கள் நிச்சயம் தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டியில் வாழ்வார்கள் என தெரிவித்தார். புயல் காரணமாக தாழ்வான பகுதிகளில் யாரும் இருக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. காரைக்கால் வேறு மாநிலம் என்பதால் அவர்களை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம். அந்த அரசுடன் சேர்ந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் திரும்பி வரும்பொழுது அங்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், சென்னையை பொருத்த வரையில் அனைத்து மீனவர்களும் கடலில் இருந்து திரும்பி பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக, அன்று ஆட்சியில் இருந்தபோது நளினி தவிர யாரும் விடுதலை செய்யக் கூடாது என்று சொல்லி விட்டு இன்று 7 பேர் விடுதலை என்று போய் இருப்பது தேர்தல் நாடகம். எங்களை பொறுத்தவரை நேற்றும் ஒரே நிலை இன்றும் ஒரே நிலை. நாளையும் ஒரே நிலைதான். அப்பட்டமான தேர்தல் நாடகம் திமுக ஆடுகிறது என்று தெரிவித்தார்.

Related Stories: