நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்கள் விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை போலீஸ் கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் ஹேமலதா கொண்ட அமர்வு, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வெளியிட்ட வீடியோக்களை நீக்குமாறு  சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்து. அப்போது, அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி புகார்கள் தொடர்பாக கர்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருகிற 26ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உயர் நீதிமன்றம் இந்த வழக்கில்   பிறப்பிக்கும் உத்தரவை  நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்றார். பார் கவுன்சில்  சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் தொடர்ந்து வீடியோக்களை கர்ணன் வெளியிட்டு வருகிறார்.  ஆனால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: