நிவர் புயலை சமாளிக்க இன்றும், நாளையும் தீயணைப்பு, மின்வாரியம் உள்பட அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை:வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர்’ புயல் நாளை (25ம் தேதி) மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.  

கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: புதிதாக உருவாகியுள்ள நிவர்’ காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 24ம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25ம்தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும்போது, மிக கனமழையுடன் 120 கிமீ வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்:

* வருவாய், தீயணைப்பு, பொதுப்பணி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 23ம் தேதியில் மாலையில் இருந்து ஜே.சி.பி. மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்.

* புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

* பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும்.

* முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர், உணவு தயாரிக்க தேவையான  அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும்,  இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

* மீனவர்கள் கட்டு மரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

* மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

* பெரிய ஏரிகளின் நீர் கொள்ளளவு, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை ஆய்வு செய்து கரை உடைப்புகள் இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

* மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்களில் அடைப்பு இருக்க கூடாது.

* நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* கால்நடை தடுப்பூசிகள், மருந்து பொருட்கள், பசுந்தீவனங்கள் இருப்பு வைக்க வேண்டும்.

* தொலைத் தொடர்பு பாதிக்கக் கூடாது.

* மின்வாரியம் சார்பில் கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களில் இருந்து பெற வேண்டும்.

* பொதுமக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை  வைத்திருக்க வேண்டும்.

* மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: