2வது நாள் மருத்துவ கவுன்சிலை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியை சேர்ந்த மாணவி சுபத்ரா, அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 170 மதிப்பெண் பெற்றும், தரவரிசை பட்டியலில் 342வது இடத்தை பிடித்துள்ளார். அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் 2வது நாள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டுள்ளார். முதல் நாள் அரசு மருத்துவ கல்லூரி இருக்கைகள் நிரப்பப்பட்ட நிலையில், 2வது நாளில் தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக தனியார் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்து படிக்க மறுத்துள்ளார் என அறிகிறேன்.

ஆனால், தனியார் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்யும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசே கல்விக்கட்டணம் செலுத்தும் என முதல்வரின் சமீபத்திய அறிவிப்பை முன்பே அறிந்திராத மாணவி தகுதியிருந்தும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அவரை போல மாணவர்கள் 2வது நாள் கவுன்சிலிங்கில் வாய்ப்பை தவற விட்டதை அறிந்து வேதனையடைகிறேன். அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மறுவாய்ப்பு வழங்கிட பரிசீலனை செய்ய தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.

Related Stories: