பாசன ஏரிகள் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ஊரக வளர்ச்சித்துறை: பொதுப்பணித்துறையிடம் ஓராண்டில் 46 ஏரிகள் ஒப்படைப்பு

சென்னை: பாசன ஏரிகளை பராமரிப்பதில் ஊரக வளர்ச்சித்துறை அலட்சியம் காட்டுவதால், அவை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 46 ஏரிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டைகள் உள்ளன. இதன் மூலம் லட்சகணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில், 2 ஆயிரம் ஏக்கருக்கு மேலான பாசன வசதி பெறும் ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், அதற்கு கீழ் உள்ள பாசன மற்றும் சிறிய ஏரி, குளம் மற்றும் குட்டைகள் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் பாசனத்துக்கு பயன்படும் ஏரிகளில் முறையாக பாரமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த ஏரிகளில் பாசனத்துக்கு தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பபட்டது. இந்த நிலையில் உலகவங்கி, நபார்டு வங்கி நிதியுதவி மற்றும் மத்திய அரசின் நிதியுதவியின் கீழ், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வரும் ஏரிகளை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பாசன வசதி பெறும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறை கையகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாசனத்துக்கு பயன்படும் ஏரிகளை கணக்கெடுத்து, அந்த ஏரிகளை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த ஏரிகள் தொடர்பாக விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஏரிகளை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்கிறது. இந்த நிலையில், பொதுப்பணித்துறையிடம் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 46 ஏரிகள் ஊரக வளர்ச்சித்துறையிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: