சாலையோரம் கிடந்த 3 அரிசி மூட்டைகள்; ரேஷன் அரிசி முறைகேடாக ஓட்டல்களுக்கு விற்பனை: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

முஷ்ணம்: முஷ்ணம் அருகே 3 ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையோரம் கிடந்தன. இந்த மூட்டைகள் மறைகேடாக ஓட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீமுஷ்ணம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை என்ற இடத்தில் வந்தபோது லாரியில் இருந்து 3 ரேஷன்அரிசி மூட்டைகளை சாலையோரம் இறக்கி வைத்து விட்டு சென்றார்களாம். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு சென்று அரிசி மூட்டைகளை பார்வையிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ரேஷன் அரிசி மூட்டைகளை லாரிகளில் கொண்டு வருபவர்கள் முறைகேடாக ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அடிக்கடி இந்த சம்பவம் நடக்கிறது. நேற்றிரவும் அதேபோல் 3 அரிசி மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர். எனவே அரிசியை இறக்கி வைத்துவிட்டுச்சென்ற லாரி டிரைவர், ஊழியர் களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும், இந்த முறைகேடுக்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற முறைகேடு சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: