அரசு செலவில் முதல்வர் அரசியல் செய்கிறார்; எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி, ஆளும் கட்சிக்கு ஒரு நீதியா?.. நெல்லையில் முத்தரசன் கேள்வி

நெல்லை, நவ. 22: இந்திய கம்யூனிஸ்ட் மாநில  செயலாளர் முத்தரசன் நெல்லையில் அளித்த பேட்டி: மத்திய அரசு, விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நிறைவேற்றியதை கண்டித்து வருகிற 26ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்கும். தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை துவங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடன் சென்ற எம்.பி., எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.  இதற்கு கொரோனா தொற்று நீடிக்கிறது என்ற காரணம் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக முதல்வர், மாவட்டந்தோறும் ஆய்வு என சென்று மக்களை சந்திக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முழுக்க, முழுக்க அரசியல் பேசுகிறார். அரசு செலவில் பயணம் செய்து முதல்வர் அரசியல் பேசுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பரவாதா? 30 நிமிடம் நிகழ்ச்சியை தவிர தேர்தல் தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார். மத்திய, மாநில ஆளும்கட்சிகள் அரசு பணத்தை பயன்படுத்தி அரசியல் செய்கின்றன.

ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டும் முடக்குகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்பதை ஏற்க முடியாது. இந்த சர்வாதிகாரம் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: