மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல ஏதுவாக சார்பதிவாளர் அலுவலகங்களில் சாய்வு தள வசதி இருக்கிறதா? அறிக்கை அளிக்க ஐஜி அலுவலகம் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல ஏதுவாக சார்பதிவாளர் அலுவலகங்களில் சாய்வு தள வசதி இருப்பது தொடர்பான அறிக்கைஅளிக்க  பதிவுத்துறை ஐஜி அலுவலகம் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம்  வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் மட்டுமின்றி, திருமண பதிவு, சீட்டு, சங்கங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, தினமும்  ஆயிரக்கணக்கானோர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர  பதிவுத்துறை தலைமை அலுவலகம் சார்பதிவளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள்  வந்து செல்ல போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. குறிப்பாக, சாய்வு தள வசதிகள் இல்லை.

வீல் சேர் இல்லாததால் பதிவுக்காக வரும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை  ஐஜி அலுவலகத்துக்கு ஏராளமான புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், பதிவுத்துறை ஐஜி அலுவலகம் சார்பதிவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி  அனுப்பி வைத்துள்ளது. அதில், ‘தனியார் கட்டிடங்களில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள் எவை?, சார்பதிவாளர் அலுவலகங்களில் சாய்வு  தள வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ளதா, ஒவ்வொரு அலுவலகங்களில் ஒரு வீல் சேர் வைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக  அனுப்ப வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்காக 211 வீல் சேர் வாங்கப்பட்டுள்ளது. அவை,  வீல் சேர் இல்லாத சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: