சென்னை வந்தடைந்தேன்..! தமிழகத்தில் இருப்பதை எப்போதும் சிறப்பானதாக கருதுகிறேன்; அமித்ஷா தமிழில் ட்வீட்

சென்னை: தமிழகத்தில் இருப்பதை எப்போதும் சிறப்பானதாக கருதுகிறேன் என அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். 2 நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா,  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷாவுக்கு, ஆட்டம், பாட்டத்துடன் பாஜக மற்றும் அதிமுகவினர், வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரைதப்பட்டை, செண்டை மேளம் உள்ளிட்ட கிராமிய கலைகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி களைகட்டியது. விமானநிலையத்திலிருந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் சென்றார். அப்போது வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாலையோரம் இருந்த பாஜக தொண்டர்களை பார்த்த அமித்ஷா காரிலிருந்து இறங்கினார். பின் தொண்டர்களை நோக்கி கை அசைத்தவாறு சாலையில் நடந்து சென்று அவர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!” என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: