2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்தியமைச்சர் அமித்ஷா: விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு:

சென்னை: சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையில், அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹச். ராஜா, தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தின் முன்பு பாஜக, அதிகமு தொண்டர்கள் தங்கள் கட்சி கொடியை ஏந்தியவாறு அமித்ஷாவை வரவேற்றனர். தொடர்ந்து, விமான நிலையத்திற்கு முன் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி அமித்ஷா கையதைத்தார்.

தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கோயம்புத்தூர், அவினாசி சாலையில் ரூ.1,620 கோவியில் உயர்மட்ட சாலைத் திட்டம்,காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், இன்று மாலை அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுகின்றனர். மேலும், தமிழக பாஜக நிர்வாகிகளுடனும் அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.

Related Stories: