திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் : பக்தர்கள் வாசலில் நின்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை பார்த்தனர்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்  நிகழ்ச்சியை பக்தர்கள் கோயில் வாசலில் நின்று பார்த்தனர். புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களுள் ஒன்றான திருப்போரூர் கந்தசுவாமி  கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. சஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு  வந்து சுவாமி தரிசனம் செய்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். இதையொட்டி  பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு பால் வழங்கப்பட்டது.  பகல் 12 மணியளவில் சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி நடைபெற்றது.  முருகப்பெருமாள் எழுந்தருளி குளத்தில் நீராடினார். இதைத் தொடர்ந்து  படித்துறையில் காத்திருந்த பக்தர்களும் சரவணப் பொய்கையில் நீராடியும்,  புனித நீரை தலையில் தெளித்தும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

  இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் தங்கவேல் கொண்டு  போர்க்கோலத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும்  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோயில் வளாகத்தின் உள்ளே பாரம்பரிய வழக்கப்படி  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் வாசலில் நின்று பக்தர்கள் முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.   இருப்பினும் கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் அரோகரா கோஷம்  எழுப்பினர். சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி மாமல்லபுரம் போலீஸ் கூடுதல்  எஸ்.பி. சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர்கள் திருப்போரூர் கலைச்செல்வி, தாழம்பூர்  பழனி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

திருப்போரூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு நிலவேம்பு குடிநீர்  வழங்கப்பட்டது. மேலும், பொது சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ  முகாம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள்  வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு முருகப்பெருமான்  திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அத்துடன் கொடியிறக்கப்பட்டு சூரசம்ஹார  விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: