மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமா?: டெல்லியில் அமித்ஷா, அஜித்தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு பகுதிகள் வழியாக வழக்கம்போல் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகள் அதிகமாகி உள்ளது. இதை தடுப்பதற்காக எல்லை  முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவும் வகையில், இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக எல்லையில் தாக்குதலை  தீவிரப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர், டாக்கில் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோடாவில் நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சம்பாவில் இருந்து வந்த லாரியை பான் சுங்க சாவடி அருகே  அதிகாலையில்  பாதுகாப்பு படையினர் சோதனை செய்ய முயன்றனர். அதன் அருகில் வீரர்கள் சென்றபோது, அதில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, அந்த லாரியை சுற்றிவளைத்து  வீரர்கள் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் தொடங்கிய 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த தாக்குதலில், லாரியில் இருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், நக்ரோடாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவு செயலாளர் மற்றும் நாட்டின் உயர்மட்ட உளவுத்துறை நிறுவனத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மும்பை தாக்குதல் போன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்து இந்தாண்டு (நவம்பர் 26) 12 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: