தமிழக போலீசுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரில் ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியது

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் டெலிகாம் டெண்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க கோரி முறையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உள்துறை அமைச்சர் தமிழக டிஜிபிக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். அதில் குறிப்பாக தமிழக காவல்துறையில் இருந்து தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அந்த டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவுன், பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என டிஜிபிக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அந்த அடிப்படியில் டிஜிபி இதனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டன குரல்களை எழுப்பி வந்தனர். அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்தனர். தொடர்ந்து கட்சிகளின் அழுத்தம் மற்றும் பல்வேறு கண்டனங்களை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை துவங்கினர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பிப். மாதம் சுமார் 30 இடங்களில் சோதனையை முக்கியமாக நடத்தினர். குறிப்பாக இந்த டெண்டர்கள் விடப்பட்டது என்பது சிசிடிவி போன்ற பல்வேறு உபகரணங்கள் மூலமாக குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த 2 நிறுவனம் மற்றும் அந்த டெண்டர்களை ஒதுக்கிய 13 அதிகாரிகள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல ஆவணங்களுக்கும் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா காலம் என்ற காரணத்தால் இந்த விசாரணையானது கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது அந்த விசாரணையானது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுளது. சுமார் ரூ.300 கோடி அளவுக்கு இந்த ஊழல் நடந்திருக்கலாம் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டெண்டர் என்பது 2018-ல் இருந்து 2020-ம் ஆண்டு மட்டுமே டெண்டர்களில் ஊழல் நடக்கவில்லை அதற்கு முன்னதாக உள்ள டெண்டர்களிலும் ஊழல் நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அலுவலகத்தில் பல்வேறு தகவல்களை கோரியிருக்கிறது.

அதாவது கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை என்னென்ன டெண்டர்கள் தமிழக காவல்துறையால் விடப்பட்டிருக்கிறது? குறிப்பாக 5 லட்சம் ரூபாய்க்கு மேலாக என்னென்ன டெண்டர்கள் விடப்பட்டுள்ளது? அதற்கு பொறுப்புள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் யார்? யார் டெண்டரை ஒதுக்கியிருக்கிறார்கள்? எந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு தொகை அதில் செலவிடப்பட்டுள்ளது? உள்ளிட்ட அனைத்து தகவல்களுமே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிலும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே பிப். மாதம் நடத்தப்பட்ட சோதனையில் பல காவல்துறை அதிகாரிகளின் மனைவிகளின் பேரில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும், வங்கிகளில் பல்வேறு பரிவர்த்தனை நடந்திருப்பதாகவுன், லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்னதாக நடந்த டெண்டர்களில் யார் யாரெல்லாம் தொடர்பு இருக்கிறார்கள்? என்பதை விசாரணை செய்ய 12 வருட டெண்டர்கள் குறித்த தகவல்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியிடம் கடிதமாக கேட்டு கோரியுள்ளது.

Related Stories: