மீண்டும் கொரோனா தொற்றின் மையமாக மாறும் ஐரோப்பா: 17 வினாடிகளுக்கு ஒருவர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கிரீசு: ஐரோப்பிய நாடுகளில் 17 வினாடிகளுக்கு ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்ப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. ஆனால் உலக பாதிப்பு எண்ணிக்கையில் 26% அளவுக்கு ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 26% அளவுக்கு அப்பகுதி மக்கள் பலியாகியுள்ளனர். இது குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றில் மையமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் 18 லட்சமாக இருந்த தொற்று பாதிப்பு இந்த வாரம் 20 லட்சமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறப்பு எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 18% அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்க்காட்டியுள்ளார். கொரோனா தொற்றால் ஒவ்வொரு 17 வினாடிக்கும் ஒருவர் உயிரிழப்பதாகவும் கூறினார். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது 60 சதவிகிதத்துக்கும் கீழ் இருப்பதே தொற்று பரவலுக்கு காரணம் என்றும் 95%-க்கு மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்தால் ஊரடங்கே தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே தெற்கு ஆஸ்திரேலியாவில் கடினமான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 6 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், உணவு விடுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் என்றும், திருமணம் இறுதி சடங்குகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: