தகவல் யுகத்தில் முதல் தயாரிப்பு முக்கியமல்ல சிறந்த தயாரிப்புதான் முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பெங்களூரு: தகவல் யுகத்தில், முதல் தயாரிப்பு முக்கியமல்ல, சிறந்த  தயாரிப்புதான் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். கர்நாடக  புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (KITS),  தகவல்  தொழில்நுட்பம் மீதான கர்நாடக அரசின் தொலைநோக்கு குழுமம், உயிரி  தொழில்நுட்பம் மற்றும் தொடக்க நிறுவனம், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப  பூங்கா (STPI),  எம்எம் அறிவியல்-தொழில்நுட்ப  தகவல்தொடர்பு நிறுவனம்  ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூருவில் தொழில் நுட்ப மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப  அமைச்சர்  ரவி சங்கர் பிரசாத், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா  உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை பிரதமர்  நரேந்திரமோடி காணொலி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்து பேசியதாவது: தொழில்நுட்பத்  தீர்வுகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு, உலகத்துக்காகப் பயன்படுத்தப்படும்  நேரம்  இப்போது வந்துள்ளது.

இதை நாம் சரியான முறையில் பயன்படுத்தி  கொள்ளவேண்டும். டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்காக  மட்டும் சந்தைகளை அரசு உருவாக்கவில்லை. அனைத்து திட்டங்களுக்கும் முக்கிய  அங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும்  யுக்திகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிக்கிறது.  தொழில் சார்ந்த தொழில்நுட்பம் மூலம் தான் மனிதர்களின் வாழ்க்கைத்தரம்  உயர்கிறது. கோடிக்கணக்கான விவசாயிகள் ஒரு ‘கிளிக்கில் மானிய உதவிகள்  பெறுவதையும், உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான, ஆயுஷ்மான் பாரத்  போன்ற திட்டங்களை இதற்கு உதாரணமாக கூறமுடியும். கொரோனா  தொற்று பரவியுள்ள இந்த காலத்தில்  தொழில்நுட்ப துறை, தனது ஆற்றலை மிகவும் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளது.  தொழில்துறை சாதனைகள் எல்லாம்  முடிந்து போனவை. நாம்  தற்போது தகவல் யுகத்தின் மத்தியில் உள்ளோம்.   தொழில்துறை யுகத்தில்  மாற்றம் நேரடியானது. ஆனால் தகவல் யுகத்தில் மாற்றம் சிக்கலானது.  

தொழில்துறை யுகம் மாதிரி அல்லாமல், தகவல் யுகத்தில் முதலில் வருவது   முக்கியமல்ல,  சிறந்ததுதான் முக்கியம். சந்தையில் உள்ள அனைத்தையும்  சீர்குலைக்க, யாரும், எந்தப் பொருளையும், எப்போது வேண்டுமானாலும்  உருவாக்கலாம். எனவே நாம் அனைத்து துறையிலும் எச்சரிக்கையுடன் பணியாற்றிட  வேண்டும். தகவல் யுகத்தில், இந்தியா தனிச்சிறப்பான இடத்தில் உள்ளது.   திறமையானவர்களும், பெரிய சந்தையும், இந்தியாவில் உள்ளன. நமது உள்நாட்டு  தொழில்நுட்பத் தீர்வுகள், உலகளவில்  ஆற்றல் வாய்ந்தவை.  தொழில்நுட்பத்  தீர்வுகள் இந்தியாவில் உருவாகி, உலகளவில் செல்லக்கூடிய நேரம் இது ஆகும்.  

அரசின்  கொள்கை முடிவுகள் எப்போதும் தொழில்நுட்ப மற்றும் புதுமை  கண்டுபிடிப்பை தாராளமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உயிரி  அறிவியல், பொறியியல் போன்ற துறைகளிலும், புதுமை கண்டுபிடிப்பு தேவை  ஏற்பட்டுள்ளது. முன்னேற்றத்துக்கு புதுமை கண்டுபிடிப்பு முக்கியம் ,  அதற்கேற்ற திறமையான, ஆர்வமான இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர்.  இவ்வாறு அவர்  பேசினார்.

Related Stories: