சிபிஐ விசாரணை நடத்த மாநிலங்களின் ஒப்புதல் தேவை

* மாநில உரிமையை பறிப்பதை அனுமதிக்க முடியாது * உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘மாநிலத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு, அம்மாநில அரசின் ஒப்புதல் கட்டாயம் தேவை. அதன் ஒப்புதல் இல்லாமல் விசாரணை நடத்த முடியாது,’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, டெல்லி சிறப்புக் காவல் நிறுவன சட்டத்தின் கீழ் இயங்குகிறது. முக்கிய வழக்குகளை இது விசாரிக்கிறது. இச்சட்டத்தின்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மட்டுமே, எந்தவித அனுமதியும் இன்றி சிபிஐ நேரடியாக எல்லா வழக்குகளையும் விசாரிக்க முடியும். ஆனால், மாநிலங்களில் விசாரணை நடத்துவதற்கு, அம்மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை. இதற்காக, மாநில அரசுகள் வழக்கமான நடைமுறையாக சிபிஐ.க்கு பொது ஒப்புதல் அளிப்பது வழக்கம். இந்நிலையில், ‘மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 6 ஆண்டுகளாக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது,’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், பாஜ அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், இந்த பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் (நவம்பர் 2020), ராஜஸ்தான் (ஜூன் 2020), சட்டீஸ்கர் (ஜனவரி 2019), காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஜார்கண்ட் (நவம்பர் 2020) ஆகிய மாநிலங்கள், சிபிஐ.க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற்றன. அதே நேரம், மாநில கட்சிகளின் ஆட்சி நடக்கும் ஆந்திரா, மேற்கு வங்கத்தில் கடந்த 2018ல் பொது ஒப்புதல் திரும்ப பெறப்பட்டது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடிகர் சுஷாந்த் கொலை வழக்கு,  தனியார் தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முயற்சித்த நிலையில், அம்மாநில அரசு சிபிஐ.க்கான பொது ஒப்புதலை கடந்த அக்டோபரில் திரும்ப பெற்றது. இதன் மூலம், இந்த மாநிலங்களில் அனைத்திலும் இனிமேல் சிபிஐ. விசாரணை நடத்துவதாக இருந்தால், அந்த மாநில அரசின் முன் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம். இந்த ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, இம்மாநிலங்களின் எல்லையில் சிபிஐ விசாரணை நடத்த முடியும்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், ‘ஊழல் வழக்கில் மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஐ தங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்,’ என கோரி இருந்தனர்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம், பெர்டிகோ மார்கெட்டிங் அண்ட் இன்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட் வழக்கில், இரு பொதுத்துறை ஊழியர்கள் ஊழல் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணையை நடத்தலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இவற்றை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர், அது பிறப்பித்த உத்தரவில், ` அரசியலமைப்பு சட்டங்கள் அனைத்தும் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்றப்படியே அமைக்கப்பட்டுள்ளன. நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பாக இது இருக்கிறது. டெல்லி சிறப்பு காவல் நிறுவன சட்டத்தின் 5வது, 6வது பிரிவுகள், சிபிஐ.யின் அதிகார வரம்பு, மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்புகளை நிர்ணயிக்கின்றன. இதன்படி, 5வது பிரிவின்படி யூனியன்  பிரதேசங்களில் மட்டுமின்றி, மாநிலங்களுக்கும் சிபிஐயை அனுப்பி விசாரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அதே நேரம், 6வது சட்டப்பிரிவில், மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குள் உள்ள பகுதிகளில் சிபிஐ விசாரணை நடத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலை கட்டாயம் பெற வேண்டும். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ தனது விசாரணையை அங்கு நடத்த முடியாது. மாநில உரிமையை பறிப்பதை அனுமதிக்க முடியாது.ஆனால், மனுதாரர்கள் வழக்கை பொருத்தவரை, உத்தரப் பிரதேச மாநில அரசு சிபிஐ விசாரணை நடத்துவதற்கான பொது ஒப்புதலை 1989ம் ஆண்டே வழங்கி இருக்கிறது. எனவே, மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என கூறினர்.

* 6வது சட்டப்பிரிவில், மாநில அரசுகளின் அதிகார எல்லைக்குள் உள்ள பகுதிகளில் சிபிஐ விசாரணை நடத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலை கட்டாயம் பெற வேண்டும்.

* மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ தனது விசாரணையை அங்கு நடத்த முடியாது.

Related Stories: