ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்; 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் நஹ்ரோடா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் திட்டங்களை அரங்கேற்ற முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாதிகளில் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரில் இருந்து 4 பயங்கரவாதிகள் பஸ்சில் ஜம்மு நோக்கி வருவதாகவும், அவர்கள் ஜம்முவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் ஜம்மு நகரை இணைக்கு ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுச்சாலையில் உள்ள நஹ்ரோடா மாவட்டத்தில் உள்ள வாகன சோதனைச்சாவடி பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு நெடுச்சாலை முடக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் இருப்பதை அறிந்த பயங்கரவாதிகள் பஸ்சில் இருந்து தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் பதுங்கி பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்  நேற்று மாலை நடந்த தாக்குதலில் குறைந்தது 12 பொதுமக்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டு வீசினர். இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தேடுதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடந்த உடனேயே, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய முழுப் பகுதியும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

Related Stories: