சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த அபராத தொகையை சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் செலுத்திய விவரம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவருக்காக அபராத தொகை கட்டியது யார் என்றும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நான்காண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்திருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் ெபங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள 34வது சிறப்பு நீதிமன்றத்தில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த அனுமதிக்கக்கோரி வக்கீல் பி.முத்துகுமார் மனுதாக்கல் செய்தார்.

அதையேற்று கொண்ட நீதிபதி, அபராத தொகை செலுத்த அனுமதி வழங்கினார். பின் வசந்தாதேவி பெயரில் ரூ.3.25 கோடி, பழனிவேல் பெயரில் ரூ.3.75 கோடி, ஹேமா பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான நான்கு டி.டிக்களை நீதிமன்றத்தில் வக்கீல் பி.முத்துகுமார் செலுத்தினார்.சிறை கண்காணிப்பாளருக்கு தகவல்: இதில் வசந்தாதேவி மற்றும் பழனிவேல் ஆகியோர் சென்னையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிலும் ஹேமா மற்றும் விவேக் ஆகியோர் ஆக்‌சிஸ் வங்கியிலும் டி.டி. எடுத்திருந்தனர். வக்கீல் பி.முத்துகுமார் செலுத்திய வங்கி டி.டி.யை நேற்று நீதிபதி சிவப்பா பரிசீலனை செய்தபின் ஏற்று கொண்டார். அதை தொடர்ந்து முறைப்படி சசிகலா செலுத்த வேண்டிய அபராத தொகை செலுத்தியுள்ளதற்கான தகவலை நீதிமன்றம் மூலம் முறைப்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.

முன்கூட்டியே விடுதலையா?

நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலாவின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. அவரது விடுதலை தொடர்பாக சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து கேட்டபோது சிறை நிர்வாகம் கொடுத்துள்ள பதிலில் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனிடையில் நீதிமன்றம் உத்தரவிட்ட அபராத தொகையை செலுத்தியதாலும் சிறையில் இருக்கும்போது கன்னட மொழியை கற்று கொண்டதால், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக அவரது தரப்பில் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில் நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்ட குற்றவாளியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்கள் முழு தண்டனை காலத்தை முடிக்க வேண்டும். சிறை கண்காணிப்பாளர் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன் விடுதலை செய்யலாம். அதற்கும் மாநில அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று மூத்த வக்கீல் விக்ரமாதித்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: