35 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலிக்கலாம் முழு கல்வி கட்டணம் கேட்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 2020-2021ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம் என்று பள்ளிகளுக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம் முழு கட்டணத்தையும் கேட்கும் பள்ளிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதையடுத்து, மாணவர்களிடம் பள்ளிகள், கல்லூரிகள் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார்  பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதில், 40 சதவீத கட்டணத்தை செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும், மீதத் தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம் என்றும் கடந்த ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இதுவரை எந்த அறிவிப்பும்  இல்லாததால், 35 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும், தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான  ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும்  தனியார் பள்ளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது.இதையடுத்து, தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என்று அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றம் உத்தரவிட்டும் பல பள்ளிகள் 40 சதவீத கட்டணம் கூட இதுவரை முழுமையாக வசூலிக்கவில்லை. 6 லட்சம் மாணவர்கள், மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளுக்கு சென்று விட்டனர் என்று தனியார் பள்ளிகள் தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், சில மாணவர்கள் முதல் தவணை கட்டணமான 40 சதவீத கட்டணத்தை செலுத்தவில்லை என்றாலும் அவர்களை தொடர்ந்து வகுப்புகளில் சேர்த்து பாடங்கள் நடத்தப்படுவதாகவும் பள்ளிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி,  தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 75 சதவீத கல்வி ஏற்கனவே வசூலித்த 40 சதவீத கட்டணம்போக மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை 2021 பிப்ரவரி 28ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம்.இந்த தொகையை  தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம். முதல் தவணையான 40 சதவீத கட்டணத்தையும், 2019-20ம் கல்வியாண்டில் செலுத்த வேண்டிய நிலுவை கட்டணத்தையும் செலுத்தாத மாணவர்கள், மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தையும் சேர்த்து  செலுத்த வேண்டும்.

முழு கட்டணத்தை வசூலித்ததாக தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுத்து நவம்பர் 27ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: