கொரோனா விதிகளை பின்பற்றி வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவுரை

சென்னை: தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்காளர் பெயர்களை சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 6 கோடியே 10 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

தற்போது நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை 18 வயது நிரம்பியவர்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “வாக்காளர்கள் பெயர்களை புதிதாக சேர்க்கும், நீக்கும் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்தவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய செல்லும் வாக்குப்பதிவு அலுவலர்களுடன் அரசியல் கட்சி பிரமுகர்களும் உடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இன்று மதியம் நான் ஆலோசனை நடத்த உள்ளேன்” என்றார்.

Related Stories: