ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள் திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தில் ஒரு பணியை கூட முடிக்காமல் திணறல்: திட்டமிடல் இல்லாததால் பல ஆயிரம் கோடி வீணாகும் அவலம்

சென்னை: முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி இதுவரை ஒரு பணியை கூட முடிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மதுரை மாநகராட்சியில் ஒரு பணி மட்டுமே முடிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கோடிக்கணக்கான மதிப்பில் 12 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2016ம் ஆண்டு சென்னையும், கோவையும், 3வது கட்டத்தில் வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட நகரங்களும், 4வது கட்டத்தில் தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களும், 5வது கட்டத்தில் ஈரோடு நகரமும் தேர்வு செய்யப்பட்டன. இதன்படி தமிழகத்தில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தற்போது வரை 125 பணிகள் நிறைவடைந்துள்ளது. 283 திட்டங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 21 திட்டங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இவற்றில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை திருப்பூர் ஒரு பணியை கூட முடிக்கவில்லை என்றும் மதுரையில் ஒரு பணி மட்டுமே முடிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கோவை 42 பணிகளை முடித்துள்ளது. சென்னை 21 பணிகளை முடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சேலம் 18 பணிகளையும், தூத்துக்குடி 13 பணிகளையும், ஈரோடு 8 பணிகளையும், தஞ்சாவூர் 7 பணிகளையும், நெல்லை 6 பணிகளையும், வேலூர் 6 பணிகளையும், திருச்சி 3 பணிகளையும் நிறைவடைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சென்னைக்கு மத்திய அரசு ஒதுக்கிய 301.62 கோடியில் 288.99 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சிக்கு ஒதுக்கப்பட்ட 196 கோடியில் 135.6 கோடியும், நெல்லைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 196 கோடியில் 136.12 கோடியும், தஞ்சாவூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 196 கோடியில் 195 கோடியும், திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 343 கோடியில் 287.43 கோடியும், சேலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 294 கோடியில் 289.12 கோடியும், வேலூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 196 கோடியில் 189.8 கோடியும், கோவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 343 கோடியில் 294 கோடியும், மதுரைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 245 கோடியில் 242.5 கோடியும், ஈரோடுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 294 கோடியில் 272.43 கோடியும், தூத்துக்குடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 196 கோடியில் 106.11 கோடி மட்டும் பயன்படுத்தபட்டுள்ளது. பல ஆயிரம் கோடிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டாலும் முறையான திட்டமிடல் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான செயல்பாடுகளில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தற்போது வரை 125 பணிகள் நிறைவடைந்துள்ளது...

Related Stories: