தாயக விடுதலைக்காக தன் குடும்பம், சொத்து அனைத்தையும் அர்ப்பணித்த வ.உ.சிதம்பரனாரின் நினைவைப் போற்றுவோம்! : மு.க.ஸ்டாலின்

சென்னை : தாயக விடுதலைக்காக தன் குடும்பம், சொத்து அனைத்தையும் அர்ப்பணித்த வ.உ.சிதம்பரனாரின் நினைவைப் போற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு”

இன்று (18-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. தீரமும் தியாகமும் மிகுந்த விடுதலைப் போரில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் போராட்டமும், அதற்காக அவர் அனுபவித்த சிறைக் கொடுமையும் வரலாற்றின் பக்கங்களில் நிறைந்திருக்கிறது.

வெள்ளையர் ஆட்சிக்கெதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்திய அவரது துணிவான முடிவு, இன்றைய கார்ப்பரேட் காலத்தில் தொழில் முனைவோராக முயற்சிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாகும். அதிகார வர்க்கம் எந்த வகையில் உரிமைப் போரை நசுக்கும் என்பதற்கு வ.உ.சி-யின் கப்பல் நிறுவனத்தை முடக்கியதும், அவருக்குச் சிறையில் கொடுக்கப்பட்ட செக்கிழுத்தல் - கல் உடைத்தல் போன்ற கடும் தண்டனைகளும் இரத்தச்சரிதமாக பதிவாகி உள்ளது.

தாயக விடுதலைக்கும், தமிழ்த் தொண்டுக்கும் தன் தனிவாழ்வு, குடும்பம், சொத்து அனைத்தையும் அர்ப்பணித்த மகத்தான தியாகி வ.உ.சிதம்பரனார். அவர் தனது இறுதிக்காலத்தில், திராவிட இயக்கத் தலைவர்களுடன் சேர்ந்து பயணித்ததும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் வ.உ.சி-யின் நினைவைப் போற்றி, அவர் குடும்பத்தினரைக் கௌரவித்து, வ.உ.சி. இழுத்த செக்கினை பொதுமக்கள் காணும் வகையில் செய்து, தியாக வரலாறு நினைவூட்டப்பட்டது.

என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய தியாகத் தலைவர் வ.உ.சி-யை அவரது நினைவுநாளான இன்று (நவம்பர் 18) போற்றி வணங்குகிறேன்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: