தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை: அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு

தூத்துக்குடி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் பலத்த  மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 101.50 அடியில் இருந்து, நேற்று ஒரேநாளில் 9.70 அடி உயர்ந்து 111.20  அடியானது. அணைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு விநாடிக்கு 9120 கனஅடி நீர் வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து  18.50 அடி உயர்ந்து 118.50 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.80 அடியில் இருந்து, 86.10 அடியாக உயர்ந்தது.தென்காசி மாவட்டத்தில் கடனா அணை நீர்மட்டம் 72 அடியில் இருந்து 76.50 அடியாக உயர்ந்தது. ராமநதி அணை 69.50 அடியாகவும், கருப்பாநதி  அணை 62.10 அடியாகவும், குண்டாறு அணை 36.10 அடியாகவும். அடவிநயினார் அணை 97 அடியாகவும் உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடியில் 16.9 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. கோவில்பட்டி-73 மி.மீ, சாத்தான்குளம் -66.8 மி.மீ,  எட்டயபுரம்-59மி.மீ, காயல்பட்டினம்- 52.2மி.மீ, ஸ்ரீவைகுண்டம்-49.5 மி.மீ, கயத்தார் 49 மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் பலத்த மழை  காரணமாக ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்தது. அரசு மருத்துவமனையிலும் தண்ணீர் புகுந்து நோயாளிகள் அவதிப்பட்டனர்.டெல்டாவிலும் மழை:  தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்தது. நாகையில் மிதமான மழை பெய்தது.  வேதாரண்யம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், நீடாமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  விட்டு விட்டு மழை பெய்தது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று வரை விட்டு விட்டு மழை  பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, மீமிசல், மணமேல்குடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும், சில இடங்களில் லேசான மழையும்  பெய்தது. மழை காரணமாக சாகுபடிக்காக கல்லணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே சுனாமி நகரில் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் சென்று பழையார்  துறைமுகம் அருகே கடலில் கலக்கிறது. கடந்த சில தினங்களாக கடல் கொந்தளிப்பால் கடல்நீர் அதிக அளவில் பக்கிங்காம் கால்வாயில் நுழைந்தது.  இதனால் சுனாமிநகர் அருகே கால்வாயில் நேற்றுமுன்தினம் திடீரென உடைப்பு ஏற்பட்டு, கடல்நீர் அப்பகுதியிலுள்ள வயல்கள் மற்றும் குடியிருப்பை  சூழ்ந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் தொடர்ந்து சீற்றமாக இருப்பதால் 20 மீனவ கிராமங்களில் 10,000 மீனவர்கள், புதுக்கோட்டை  மாவட்டத்தில் 5,000 மீனவர்கள் நேற்று 7வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு மழை காரணமாக விநாடிக்கு 600 கனஅடி நீர்  வரத்து உள்ளது. இதனால் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 44 அடியாக உயர்ந்தது. இதையடுத்து உபரி நீர் 600 கனஅடியும் ஆற்றில்  வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய சங்கு ஒலிக்கப்பட்டு மக்களை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வீடு இடிந்து மூதாட்டி பலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் அருகே  கருங்குளத்தில் சோலையம்மாளின் (71) ஓட்டு வீடு, நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுடன் சிக்கிய அவர், பரிதாபமாக  உயிரிழந்தார்.

4 வழிச்சாலையில் சுவர் விழுந்தது: விருதுநகர் - சாத்தூர் இடையே துலுக்கப்பட்டியில் ரயில்வே லைனுக்கு மேல் மேம்பாலம்  உள்ளது. நேற்று  மாலை  4 மணியளவில், இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர் 50 அடி நீளத்திற்கு கற்கள் சரிந்து சர்வீஸ் ரோட்டில் விழுந்ததால் மக்கள், வாகன  ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: