உபி.யில் கடந்த 10 ஆண்டுகளில் 50 சிறுமிகளை பலாத்காரம் செய்த அரசு இன்ஜினியர் கைது

* சிபிஐ அதிரடி நடவடிக்கை

* இணையத்தில் போட்டோ, வீடியோ பகிர்வு, விற்பனை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அரசு இளநிலை பொறியாளரை  சிபிஐ.யினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், `நாட்டில் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்  பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது கடந்தாண்டை காட்டிலும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2008 முதல் 2018ம் ஆண்டு வரையிலான, பத்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 6 மடங்கு அதிகரித்துள்ளது. 2088ல் 22,500  வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில், 2018ல் 1,41,764 வழக்குகள் பதிவாகி உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் உத்தர பிரதேச  மாநிலம் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் காணொலி மூலம் நடந்த பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில், சட்ட விரோத பைல், புகைப்படம், வீடியோ பகிர்வை  தடை செய்ய உறுப்பினர்கள் நாடுகள் சரியான, முறையான தகவல் அளித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின்  பேரில், சித்ரகூட் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஜூனியர் இன்ஜினியர் ராம்பவானை, சிபிஐ.யினர் அதிரடியாக நேற்று கைது செய்தனர். அவரிடம்  சிபிஐ.யினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ``இவர் கடந்த 10 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகளைபாலியல் பலாத்காரத்துக்கு  உட்படுத்தியுள்ளார்.

இவர்கள் அனைவரும் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவரிடம் சிக்கிய  சிறுமிகள் அனைவரும் பாண்டா, சித்ரகூட், ஹமிர்பூர்  மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவரது இ-மெயில்களை பரிசோதித்த போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சட்ட விரோதமான `டார்க்நெட்’  குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதும், சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பகிர்ந்தது, விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.  குழந்தைகள், சிறுமிகளின் கவனத்தை திசை திருப்ப, மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொடுத்து பலாத்காரம் செய்ததாக  ஒப்புக் கொண்டுள்ளார்,’’ என்று தெரிவித்தனர்.

ராம்பவானின் வீட்டை சோதனையிட்ட போது, எட்டு மொபைல் போன்கள், 8 லட்சம் ரூபாய் பணம், செக்ஸ் பொம்மைகள், மடிக்கணினி உள்ளிட்ட  எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாண்டா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க  இருப்பதாக சிபிஐயினர் தெரிவித்தனர்.

மாந்திரீகத்துக்காக சிறுமியை கொன்று நுரையீரலை எடுத்தவர்கள் கைது

கான்பூர் மாவட்டம், கதாம்பூர் பகுதியை சேர்ந்தவர் பரசுராம். இவரது மனைவிக்கு கடந்த 21 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதால், மாந்திரீகம்   செய்வதற்கு நுரையீரல் தேவை என்று  உறவினர் அன்குல், நண்பர் பீரனிடம்  சிறுமியை கடத்தி அவளின் நுரையீரலை கொண்டு வர  சொல்லியுள்ளார்.

இதையடுத்து, தீபாவளி தினத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுமியை கடத்திய அவர்கள், கூட்டு பலாத்காரம் செய்து கொன்று விட்டு  அவரது மாந்திரீகத்துக்காக நுரையீரலை எடுத்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பலாத்கார முயற்சி தோல்வி? 2 சிறுமிகள் படுகொலை

உத்தர பிரதேச மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 8, 12 வயது நிரம்பிய சகோதரிகள்  காய்கறி பறிக்க தோட்டத்துக்கு சென்றனர். நீண்ட நேரமாகியும் திரும்பாததால், அவர்களைத் தேடி சென்றபோது, கண்களில் காயத்துடன் குளத்தில்  இறந்து கிடந்தனர். `பலாத்கார முயற்சி தோல்வி அடைந்ததால், சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதாக சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி  வருகின்றனர்,’ என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: