ஏழு நாள் போராட்டத்துக்கு பின் பாம்பன் பாலத்தில் சிக்கிய கிரேன் மிதவைமேடை மீட்பு

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் சிக்கிய கிரேன் மிதவை மேடை ஒரு வார தொடர் போராட்டத்துக்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டது. கடல் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்படாமல் இருக்க தடுப்புகளுக்கு இடையே பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டது. பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசி வந்த நிலையில், கடந்த 9ம் தேதி இரவில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் நீரோட்டம் அதிகரித்தது. அப்போது பாம்பன் வடக்கு கடல் பகுதியில் புதிய ரயில் பால கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிரேன் மிதவை மேடை நீரோட்டத்தில் இழுத்து வரப்பட்டு பாறையில் மோதி ரயில் பாலத்தில் சிக்கி நின்றது. இதனை மீட்கும் தொடர் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்தன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீட்புப்பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

மிதவையை மீட்கும் பணிகள் நேற்று மீண்டும் துவங்கின. பாலத்தில் சிக்கி நின்ற மிதவை மேடை, மூன்று விசைப்படகுகளில் கயிற்றால் கட்டி இழுக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின், பாலத்தில் சிக்கியிருந்த மிதவை மேடை, அங்கிருந்து கடல் பகுதிக்குள் வந்தது. ஏழு நாள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட மிதவை படகு, பாலத்தின் அருகில் இரும்பு தூண்களால் உருவாக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு அப்பால் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. மேலும் மற்ற மிதவை மேடைகளும் இரும்பு உருளை தடுப்புகளுக்கு இடையே பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாம்பன் கடல் பகுதியில் சமீபத்தில் கடல் சீற்றம், பலத்த காற்றினால் அடிக்கடி மிதவை மேடைகள் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்படுவது, கடலில் மூழ்குவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் புதிய ரயில் பாலத்திற்கு கடலில் நடைபெற்று வந்த தூண்கள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: