அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்..!! மக்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டியது இதனால் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், காவனூர், செந்தமிழ் நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை நீடித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்துள்ளது அத்திபட்டு புதுநகர் பகுதியில் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில்; வெள்ளக் காலங்களில் பொது மக்களுக்கு ஓர் வேண்டுகோள், பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: