அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விசாரணையை எதிர்கொண்டு, குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

சென்னை; சூரப்பா விசாரணையை எதிர்கொண்டு, குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என்று கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது நடத்தப்படுகின்ற விசாரணைக்கான காரணம் குறித்த விளக்கத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ரூபாய் 700 கோடி ஊழல் புகார் மற்றும் முறைகேடான பணி நியமனங்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை ஆராய்வதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழுவை தமிழக உயர்கல்வித்துறையானது கடந்த 11ம் தேதி அறிவித்தது. அந்த குழுவானது தன்னுடைய பணியை முழுமையாக தொடங்காத நிலையில் தற்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஒரு விளக்கத்தினை அளித்திருக்கிறார். அதில், உண்மை நிலையை அறிவதற்காகவும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர் புகார்கள் வந்ததன் எதிரொலியாகவே விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை குழுவை கண்டு சூரப்பா பயப்பட தேவையில்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளான அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விசாரணையை எதிர்கொண்டு, குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். சூரப்பா தவறு செய்தாரா? என்பதை விசாரிக்கவே குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையிலேயே சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அன்பழகன் குறிப்பிட்டார். நேற்றைய தினம், திராவிட முன்னேற்றக்கழக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். அதில், சூரப்பாவை தமிழக அரசு பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், சூரப்பா தொடர்ந்து பதவியில் நீடிப்பது அழகல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டுக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். யார் மீது புகார்கள் எழுந்தாலும், அவரை சஸ்பெண்ட் செய்ய கோருவது தலைவர்களின் வேலையாக மாறிவிட்டது. சூரப்பா மீது விசாரணை நடத்தப்பட்டு விசாரணை குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே எவ்வித நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து உயர்கல்வித்துறை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். சூரப்பா மீதான விசாரணை என்பது அடுத்த வாரம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: