அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அமாவாசை உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். இதில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அமாவாசை துவங்கியதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பலர் தீபாவளி புத்தாடை அணிந்து வந்திருந்தனர்.

ஆனால் இரவு நடை சாத்தப்பட்டிருந்தது. நேற்று பகல் 12 மணிவரை அமாவாசை என்பதால், அதிகாலை முதல் பக்தர்கள் அதிகம் வந்திருந்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். அமாவாசையையொட்டி பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுபோல் பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: