உற்சாகம் தந்த தந்தேராஸ் பண்டிகை 40 டன் தங்கம் விற்பனை: தந்தேராஸ் தங்கம் விற்பனை

மும்பை: நாடு முழுவதும் தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு சுமார் 20,000 கோடி மதிப்புள்ள 40 டன் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 35 சதவீதம் அதிகம் என, இந்திய நகை விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அட்சய திருதியையை தொடர்ந்து, தங்கம் வாங்க மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தந்தேராஸ் பண்டிகை கருதப்படுகிறது. மும்பை உட்பட வடமாநிலங்களில் இந்த பண்டிகை தினத்தில் தங்கம் வாங்குவதை மக்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இதனால், சென்னை, பெங்களூரு, மும்பை உட்பட நாடு முழுவதும் நகைக்கடைகளுக்கு ஏராளமான மக்கள் வந்தனர்.

குறிப்பாக மும்பையில் நகைக்கடைகள் நிறைந்த ஜவேரி பஜார், தாதர், பாந்த்ரா, சாந்தாகுரூர், விலே பார்லே, ஜுஹூ, அந்தேரி, முலுண்ட், மாட்டுங்கா, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் வரிசையில் நின்று நகை வாங்கிச் சென்றனர்.

நகை விற்பனை தொடர்பாக இந்திய நகை விற்பனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், ‘கடந்த ஆண்டு நாடு முழுவதும் தந்தேராஸ் பண்டிகைக்கு சுமார் 12,000 கோடி மதிப்பிலான நகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு இது ₹20,000 கோடியை எட்டியுள்ளது. இதுபோல், கடந்த ஆண்டு சுமார் 30 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு 40 டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட 70 சதவீதம் விலை உயர்ந்திருந்தாலும், தங்கம் விற்பனை 30 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு போன்ற காரணங்களால் நகை விற்பனை மந்த நிலையில் இருந்தது. தற்போது எதிர்வரும் திருமண சீசன் மற்றும் தந்தேராஸ் பண்டிகைக்காக மக்கள் நகை வாங்கியுள்ளனர். இந்த ஆண்டு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. இதுவும் நகை விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம்’’ என்றார்.

கடந்த ஆண்டை விட தங்கம் விலை சுமார் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு பிறகு விலை சற்று குறைந்துள்ளது. இதுவும் நகை விற்பனை உயர மற்றொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிக்கனமாக செலவு செய்து சேமித்த பணத்தில் தங்கம் வாங்கியுள்ளனர் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஆபரண தங்கம் மும்பையில் சராசரியாக 10 கிராம் ₹50645 ஆக இருந்தது என நகை வியாபாரிகள் கூறினர்.

Related Stories: