பட்டாசு நெருப்பு விழுந்ததில் குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவரது, வீட்டின் மாடியிலும் அருகிலும் சுமார் 6 குடிசை வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். அப்போது, திடீரென அங்கிருந்த ஒரு குடிசையின் மீது பட்டாசு வெடித்து சிதறி தீப்பொறி விழுந்ததில் குடிசை வீடு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. மேலும், அருகருகே உள்ள மற்ற குடிசைகளுக்கும் தீ மளமளவென பரவியது. வீடு தீப்பிடித்து எரிவதை கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் மதுரவாயல், ஜெ.ஜெ. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில், 6 குடிசை வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகையை ஒட்டி விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என தீயணைப்பு போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 6 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலே அமைக்கப்பட்டிருந்த விளம்பர பெயர் பலகையில் பட்டாசு தீப்பொறி விழுந்ததில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது. இதனை ராமாபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

Related Stories: