திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா: சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தடை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது. கோவிலில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருள, 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் 20, 21ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடற்கரைக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால், கோவிலிலிருந்து இறங்கும் பகுதியில் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் மாலையில் தங்கத்தேரில் சுவாமி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்கு பதிலாக, சுவாமி-அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. காலையில் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். பின்னர் மதியம் 1.30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் கடற்கரைக்கு பதிலாக, கோவில் கிரிபிரகாரத்தில் கிழக்கு பகுதியில் சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

7-ம் திருநாளான 21-ம் தேதி இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 6, 7-ம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://www.youtube.com/channel/UCDiavBtRKei0x1fYVup\Ew/live என்ற இணையதளத்தில் நேரலையாக காணலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: