தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜவுளி மற்றும் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முககவசம் அணிந்து கொரோனாவை விரட்ட வேண்டும் என்று காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் இன்று அனைத்து தரப்பினராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், கடந்த 2 நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

மேலும், தீபாவளி என்றாலே புத்தாடை மற்றும் பட்டாசு விற்பனை தான் அதிகமாக இருக்கும். கொரோனா பரவல் இருந்தாலும் கடந்த 2 தினங்களாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. ஒருபக்கம் தீபாவளி விற்பனை சூடுபிடிப்பது போல் மறுபக்கம் டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை சூடுபிடித்து வருகிறது. புத்தாடைகள் உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாக தீபாவளியை கொண்டாட தயாராகிவிட்டனர். அனைத்து கோயில்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: