குளித்தலை பெரிய பாலம் பரிசல் துறை ரோட்டில் வளைந்து நிற்கும் மின் கம்பத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் உள்ளது பரிசல் துறை ரோடு. சில ஆண்டுகளுக்கு முன் இந்த ரோடு வழியாகத்தான் காவிரிக்கு சென்று முசிறி செல்ல வேண்டுமென்றால் பரிசலில் ஆற்றை கடந்து முசிறிக்கு சென்று அங்கிருந்து நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று விட்டு மீண்டும் அதே பரிசலில் குளித்தலைக்கு வருவது வழக்கமாக இருந்து வந்தது. பின்னர் குளித்தலை முசிறி பெரியார் பாலம் கட்டியவுடன் வாகன போக்குவரத்து தொடங்கியது.

இத்தனை பாரம்பரியம் மிக்க பரிசல் துறை ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம், தனியார் பள்ளி, தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஏராளமாக செயல்படுகின்றன. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் குளித்தலை பகுதியில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் உடலை பரிசில் துறை ரோட்டில் உள்ள காவிரி மயானத்திற்கு கொண்டு செல்ல இந்த ரோடு தான் பயன்படுகிறது. இவ்வாறு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பெரிய பாலம் பரிசல் துறை ரோடு நுழைவுவாயிலில் உள்ள மின் கம்பம் ஆபத்தான நிலையில் வளைந்து உள்ளது. இவ்வழியாக அனைத்து மின்வாரிய அதிகாரிகளும் சென்று வருகின்றனர். ஆனால் இது போன்று ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையிலுள்ள மின்கம்பத்தை கண்டும் பாராமுகமாக இருந்து வருகின்றனர்.

மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் சாய்ந்து நிலையிலுள்ள மின் கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ அல்லது மின்கம்பம் சாய்ந்தாலோ ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.இதனால் மின்வாரிய அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி பெரிய பாலம் பரிசல் துறை ரோடு நுழைவு வாயிலில் உள்ள மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: