காஞ்சிபுரம், செங்கை, திருவள்ளூர் சென்னையில் இன்று இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக் கடலில் இலங்கை முதல் வட தமிழக கடலோரப் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டு இருப்பதால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே சராசரி அளவை விட அதிகமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை காலை 11 மணி வரையில் பெய்தது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், திருவான்மியூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. அண்ணாசாலை, கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.  

அதிகபட்சமாக நேற்று சென்னையில் 30 மிமீ மழை பெய்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை முதல் வட தமிழக கடலோரப் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும். சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகம் புதுவை கடலோர பகுதிகளில் வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மின்னலும் சேர்த்து கனமழை பெய்யும். சென்னை நகரில் இரண்டு நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும். இவ்வாறு கூறியுள்ளது.

Related Stories: