வியாபாரி, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீசாருக்கு குற்றப்பத்திரிகை நகல்: மதுரை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிந்து, சிபிஐ தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிபிஐ தரப்பில் இந்த இரட்டை கொலை வழக்கில் 31 பக்க குற்றப்பத்திரிகை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செப். 25ல் தாக்கல் செய்யப்பட்டது. கொரோனாவால் இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர்த்து, இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், சாமத்துரை, போலீசார் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ்பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேருக்கு  எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்து இன்ஸ்பெக்டர் தர் உள்ளிட்ட 9 பேரும் அழைத்து வரப்பட்டு நீதிபதி வடிவேல் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தர், தன்னை சிறையில் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வில்லை. தனது வழக்கறிஞரை சந்திக்கவும், முதல் வகுப்பு வசதி ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைத்தார்.

Related Stories: