துரைக்கண்ணு மறைவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவு குறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றுக்குள்ளாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்க, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. உயிர் காக்கும் உயரிய மருந்துகள் அளிக்கப்பட்டு, பிராணவாயு கொடுக்கப்பட்டு வந்தது.

கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து நுரையீரல் பாதிப்பு 90 சதவீதமாக அதிகரித்ததால் உயர்தர தொடர் சிகிச்சைகள் மருத்துவ வல்லுனர் குழுவினரால் பல்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் கடந்த மாதம் 31ம் தேதி இரவு உயிரிழந்தார். மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான விவரங்களை காவேரி மருத்துவமனையின் பதிவேடுகள் மற்றும் பிற ஆவணங்களை மாநில மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆய்வு செய்து அவர்களுடைய அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் தந்த அறிக்கையின் மீது எனது விளக்கத்தினையும், அரசு எடுத்த நடவடிக்கைகளையும் நான் எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: