ஆற்காடு அருகே பழமையான மரம் சாய்ந்து அரசுபள்ளி கட்டிடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ஆற்காடு: ஆற்காடு தோப்புக்கானா ஆரணி சாலையில் நூலகம் அருகில் அரசு வடக்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. தொடக்கப்பள்ளியில் 270 மாணவ மாணவிகள் கடந்த கல்வியாண்டில் படித்து வந்தனர். தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான வேப்ப மரம் கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மழை பெய்யும்போது விரிசல் வழியாக மழை நீர் உள்ளே  சென்று தண்ணீர் தேங்குகிறது. இந்த கட்டிடம் மட்டுமின்றி பள்ளியின் மற்ற கட்டிடங்களும் ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால் கட்டிடங்கள் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது வரும் 16ம் தேதி பள்ளிகளை திறக்க அரசு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. எனவே பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக சாய்ந்துள்ள மரத்தை அகற்ற வேண்டும், சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: