தீபாவளியையொட்டி ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தையில் வெள்ளாடுகளுக்கு ‘செம’ டிமாண்ட்

ஆண்டிபட்டி: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தையில் வெள்ளாடுகளுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆட்டின் விலை ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால், செம்மறி ஆடு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கும். இந்த சந்தையில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வர். இங்கு குரும்பாடு, வெள்ளாடு, செம்மறி ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கிராமப்புறங்களில் பசுந்தீவனங்களை சாப்பிட்டு வளரும் வெள்ளாடுகளை வாங்க வியாபாரிகள், இறைச்சிக் கடைக்காரர்கள் அதிகளவில் வருகின்றனர்.

இதனால், வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. செம்மறி ஆடுகளுக்கு டிமாண்ட் குறைவாக உள்ளது. 15 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், 17 கிலோ கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் 7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வெள்ளாடு இறைச்சி விற்பனை அதிகமாக நடந்தது. இதனால், தற்போது தீபாவளி நேரத்தில் போதிய வெள்ளாடுகள் வரத்து இல்லை. ஆனால், செம்மறி ஆடுகளின் வரத்து அதிகமாக உள்ளது. இவைகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்’ என்றனர்.

Related Stories: