நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை: நள்ளிரவு அமலுக்கு வந்தது; தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வழி வகுத்துவிடும் என பட்டாசுக்கு தடை கேட்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் தமிழகம் உட்பட 18 மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏ.கே.கோயல், ஆணையர்கள் எஸ்.கே.சிங் மற்றும் எஸ்.எஸ்.கர்ப்யால் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரம் மற்றும் நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 9ம் தேதி நள்ளிரவு (நேற்று) முதல் அமல்படுத்தப்பட்டு வரும் 30ம் தேதி வரை தொடரும்.

அதேப்போன்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிலுள்ள எந்தெந்த நகரங்களில் காற்றின் தரம் மோசமான தரத்தில் இருந்ததோ அந்த நகரங்களிலும் இந்த தடை உத்தரவு பொருந்தும். டெல்லி மற்றும் அதை சுற்றிய மாநிலங்களில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும், தயாரிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. காற்றின் தரக்குறியீடு பிரச்சனை இல்லாத இடத்தில் மட்டும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம். மற்ற இரண்டு நிலைக்கும் எந்தவித பட்டாசுகளையும் வெடிக்க அனுமதி கிடையாது. அதுவும் அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்.

இதனை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை என்றால், இரவு 8 முதல் 10 மணிவரை பட்டாசுகள் வெடிக்கலாம். இதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்டவைகளுக்கு நள்ளிரவு 11.55 முதல் 12.30 வரையும், அதேப்போன்று குருபூர்ணிமா நிகழ்ச்சியின் போது காலை 6 முதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு கட்டாயம் கடைபிடிக்கப் படுவதை ஒவ்வொரு மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதனை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மாநிலங்களின் சுற்றுச்சூழல் வாரியங்களும் துல்லியமாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

* 122 நகரங்களில் திருச்சி, தூத்துக்குடி

தேசிய அளவீட்டை விட காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக நாடு முழுவதும் 122 நகரங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த நகரங்களில் தேசிய தீர்ப்பாயத்தின் பட்டாசு வெடிக்க தடை உத்தரவு அமல்படுத்தப்படும். மேற்கண்ட 122 நகரங்களில் தமிழகத்தின் திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகியவை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பட்டாசு தடையை மீறி அவற்றை விற்பனை செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: