தூத்துக்குடியில் இன்று அதிகாலை மருத்துவமனைக்குள் பாய்ந்த காய்கறி லாரி: திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று அதிகாலை மேம்பாலத்தில் வந்த காய்கறி லாரி மருத்துவமனைக்குள் பாய்ந்தது. இதில் டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் நாசமாயின. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(47). காய்கறி வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான லாரியில் தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை அனுப்பியிருந்தார். லாரியை திண்டுக்கல் அருகே ராமலிங்கம்பட்டி, கிழக்கு தோட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ரமேஷ்குமார்(36) என்பவர் ஓட்டினார்.

கிளீனராக அதே ஊரைச் சேர்ந்த ராஜகோபால் மகள் லட்சுமணன் (27) இருந்தார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் எட்டயபுரம் ரோடு மேம்பாலத்தில் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த ரோட்டிலிருந்து ஜெயராஜ் ரோடு மேம்பாலத்திற்கு திரும்பும் போது லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்திலிருந்து தலைகீழாக கவிழ்ந்து, அங்கிருந்த தனியார் மருத்துவமனை செக்யூரிட்டி கேபினில் விழுந்தது. இதில் அந்த கேபின் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மருத்துவமனைக்குள் இருந்த கேபினில் அந்த நேரத்தில் செக்யூரிட்டி யாரும் இல்லாததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும் லாரி மருத்துவமனைக்குள் விழுந்ததில் பாலத்தின் சுவருக்கோ, மருத்துவமனையின் சுவர்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் நசுங்கி நாசமாகியுள்ளன. லாரியை கிரேன் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி மதியம் வரை நீடிக்கும் என்று மத்தியபாகம் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மேம்பாலத்திலிருந்து மருத்துவமனைக்குள் லாரி கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: