அருங்காட்சியக டெண்டருக்கு ரூ1 கோடி லஞ்சம்: கட்டுமான நிறுவன மாஜி தலைவர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள வர்த்தக மையம் மற்றும் கைவினை அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணிக்கான டெண்டர் அளிப்பதற்கு ரூ. 1 கோடி லஞ்சம் கோரியதாக ஹிந்துஸ்தான் ஸ்டீல்ஒர்க்ஸ் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மொயுக் பாதுரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில்,‘ஜில்லியன் இன்ஃப்ரா நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான அனந்த் சக்ஸேனாவும், மொயுக் பாதுரியும் இணைந்து வாரணாசியில் உள்ள வர்த்தக மையம் மற்றும் கைவினை அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணிக்கான டெண்டர் அளிப்பதற்கு ரூ.1 கோடி லஞ்சம் கோரியதாக புகார் வந்தது.

இதற்காக வாரணாசியைச் சேர்ந்த விஜய் நிர்மாண் நிறுவனத்தின் நிர்வாகிகள் என்.கிருஷ்ணா ராவ், வி.அஜய்குமார் ஆகியோரை அணுகி உள்ளனர். மேலும், சக்ஸேனாவும், மொயுக் பாதுரியும், வர்த்தக மையத்தின் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற வேண்டுமானால் ரூ. 1 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர். இதையடுத்து முதல் தவணையாக கிருஷ்ணா ராவும், அஜய்குமாரும் ஐதராபாத்தைச் சேர்ந்த மாதுரி கட்டுமான நிறுவனத்தின் பெயரால் ரூ. 50 லட்சம் பெற்றுள்ளனர். இந்த பணம், அனந்த் சக்ஸேனாவின் ஜில்லியன் இன்ஃப்ரா நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் கடந்த 2015ம் ஆண்டு மே 28-ம் தேதி அனுப்பி உள்ளனர். பின்னர் இந்தத் தொகையானது, தீரஜ் கன்சால் என்பவர் மூலமாக பாதுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’என்றனர்.

Related Stories: